இவை போதும் எனக்கு . . .

 தொலைதூரப் பயணம்

தெருவோரக் கடையில் ரீ

அறிமுகம் இல்லாதவர்களின் கணநேர நேசம்

சில கோவில்களின் தரிசனம்

வயல்வெளிப் பறவைகள் 

கடலோரக் காற்று 

கதை பேசும் அலைகள் 

கால் புதைக்க மணல்

சிந்திக்க தனிமை

சிலிர்க்கவிடும் மெளனம்


வாழ்வின் நெருக்கடிகளில் 

வதங்கும் மனதை 

ஆற்றுப்படுத்த 

இவை போதும் எனக்கு.



"அது"

அந்த முகத்தில் வெறுமை

இந்த முகத்தில் கண்ணீர் 

இருவருக்கும் இடையில் "அது"


(புரியாமல் எழுதுவது தான் கவிதை என்றால் இதுவும் கவிதைதான் வாசித்துப் பாருங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று புரியும்)



கல்யாண மேளம்.......

 கண்ணீர் சிந்திப் பிரிந்தவனின்

காதுகளில் ஒலிக்கிறது

கல்யாண மேளம்.......




கரைமீறி ஒடுகிறது வெள்ளம்......

கனவுகளை மட்டுமே

தின்று வளர்ந்தவன்

காலத்தின் ஒட்டத்தில்

அனாதையாய் நிற்கிறான்

கரைமீறி ஒடுகிறது வெள்ளம்...... 



இரண்டாய்த் தெரியும் ஒரே க(வி)தை

 அவனும் அவளும் ஒன்றாக வந்தார்கள்- இப்போது 

அவனைவிட உயரத்தில் அவள்

அவனுக்கு இல்லை 

உதடும் மார்புகளும் 

அழகும் இளமையும்.

*  *  *  *  *  *. *  *  * 

அவர்களும் இவர்களும் சமமாக இருந்தார்கள் 

சடுதியில் இவர்கள் தாழ்ந்து போனார்கள் 

அவர்களிடம் இருந்தன  மூளையில் நரிகள்.

S.Kirushnakanthan




ஒரு கொக்கின் தவம்

அந்திகளின் தேசத்தில் 

"வெள்ளந்தியாய்"

ஆற்றங்கரையில் ஒரு கொக்கு


ஒற்றைக் காலூன்றி 

உயிர் வரைக்கும் பசியோடு 

மற்றைக்கால் தூக்கி - ஒரு

மோனத்தவம் மீன் தேடி


உடல் பசிக்க உயிர்வலிக்க

உள்மனதில் கனலெரிக்க

ஓலமிடும் வயிற்றோடு உபவாசம்


நெத்தலியும் சூடைகளும்

வழி முழுக்க வந்தாலும் 

"சூரன்" மீன் தேடி ஒரு நெடும்பயணம்


காற்றென்ன மழை என்ன

கடும் கோடை வந்தாலும்

ஊற்றுக் கண் வற்றி நதி

ஒன்றுமில்லையானாலும் 


ஊர்கூடி நின்றாலும் 

உறவெதிர்த்துச் சென்றாலும்

ஒற்றைக்கால் ஊன்றி நிதம்

"நிற்றல்" தொடரும்


என்றோ ஒரு நாள் . . . . . . .

மேற்கிலே வெள்ளி வரும்

கால் தேடிச் "சூரன்" நீந்தி வரும்

அன்று வரை 

உபவாசம் தொடரும் 

உயிர்வலிக்கும் என்றாலும்


S. Kirushnakanthan



ஏற்புரை

எங்கள் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  தலைவர் அவர்களே தலை சிறந்த ஆக்க இலக்கிய  கர்த்தா தெணியான் அவர்களே எமது நூலின் தரம் சுட்டி நயப்புரை வழங்கிய தகமைசால் ஆசிரியர் ரதீஸ் அவர்களே எம்மை எம் அழைப்பை எற்று இந்கு கூடியிருக்கும் சபையோர்களே  உங்களுக்கு முதல்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

 பகல் எரியும், இரவு தினம்  குளிரும் கார்கால கோடை ஒன்றில், நினைவெரியும் நீண்ட கனவெரியும் வேளையிதில் அம்மா என சொல்லி அன்பு கலந்தெமக்கு இன்பம் அளித்தவளை, ஈன்றவளை, தாயவளை, இம்மாநிலம் முழுதும் புகழ் பரப்பி வாழ்ந்தவளை நோய் உண்ணக் கொடுத்துப் பின் தீயுண்ணக் கொடுத்து விட்டு
 
நின்ற புகழுடையீர் உம்மோடு மேடையிலே ஒர் கவிதை நூல் வெளியீட்டுக்கு தயாராகி வீற்றிருப்பதில் மனம் துயர் உண்டு சிரிக்கிறது
இதனை  காண எம் அன்னை எம்மோடு இல்லையே எனும் போது கண்களும் பனிக்கின்றன

இந்த நூல் வெளியீடு என்பது எமது புகழ் எண்ணிச் செய்யப்பட்டதல்ல, பணம் ஈட்டும் எண்ணமும் எள்ளளவும் இல்லை. எம்மிடம் இருந்த கவிதைகளை ஒன்று திரட்டி அவற்றை அன்னையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணமே இம் முயற்சியின் ஆதார சுருதியாக இருந்து எம்மை இயக்கியது அதுவே இன்று நூல் வடிவில் உங்கள் கைகளில் சிரிக்கிறது 

இந்நிகழ்விற்கு ஆசிரியர் திரு வாணிமுகுந்தன் அவர்கள்  தலைமையேற்க எழுத்தாளர் தெணியான் அவர்கள் இந்நூலை வெளியிட்டு வைத்திருக்கிறார் முதல் பிரதியை எமது தந்தை சிவசோதி அவர்கள் பெற்றிருக்கிறார்கள்   இந்நூலிற்கு ஆசிரியர் திரு றதீஸ்  அவர்கள் சிறந்த திறனாய்வுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள் இவற்றை எல்லாம் காணும் போது இந்தப் பட்டிப் பூக்களுக்கு இப்படியோர் சிம்மாசனமா என எண்ணி இதயத்தின் ஒர் ஓரம் கூச்சத்தால் நெளிகிறது 

இருந்தாலும் இந்த சிம்மாசனம் எங்களுக்குரியதல்ல எங்கள் கவிதைகளுக்குரியதல்ல எங்களை ஈன்றெடுத்து பாலூட்டி கல்வி அளித்து காத்த எங்களுயிர் தாயவளுக்கே

எங்களை இந்த மேடையில்
எந்த ஒர் சொல் எங்களை போற்றியிருக்கிறதோ அந்தச் சொல் அன்னையினை போற்றியதாகவே அர்த்தம் கொள்கிறோம்
ஏனென்றால் இந்தப் பூக்களை போசித்த வேர் அது தான்
எங்களை இந்த மேடையில்
எந்த ஒர் சொல்  தவறு என்று சுட்டியிருக்கிறதோ  அந்தச் சொல் எங்களை சுட்டியதாகவே  அர்த்தம் கொள்கிறோம் அவற்றை நிவர்த்தி செய்ய முயல்வோம் மேலும் மேலும் சுடர் பரப்பிப் பிரகாசிப்போம் 

அத்தோடு மேலும் இன்னும் ஒன்று சொல்ல வேண்டிய கடமை எமக்கிருக்கிறது 
எமது அன்னை நோயுற்றிருந்த போது எம்மோடு தோள் தந்து உழைத்தவர்கள் 
தீயில் எரிந்த போது துயரம் தணித்தவர்கள், 
கண்ணீர் துடைத்தவர்கள்
அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவி வித்துக் கொள்கின்றோம்.

நன்றி



(அன்னையின் நினைவாக வெளியிட்ட கலாசோதி என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய ஏற்புரை)